டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்


டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2022 1:42 AM IST (Updated: 3 April 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி, ஏப்.3-
ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர் அர்ச்சனா சர்மா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு சிகிச்சை அளித்தபோது பிரசவத்திற்கு பின் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. டாக்டர் அர்ச்சனா சர்மா முயற்சித்தும் அந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் டாக்டர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் செயலால் மன உளைச்சலும், வேதனையும் அடைந்த டாக்டர் அர்ச்சனா சர்மா கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் இந்த செயலை கண்டித்து நேற்று இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, திருச்சி தில்லை நகரில் உள்ள இந்திய மருத்துவர் சங்க கிளை வளாகத்தில் தலைவர் டாக்டர் மோகன் தலைமையில் செயலாளர் டாக்டர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அவசரம் இல்லாத மருத்துவ பணிகளை நிறுத்தி விட்டு ஆஸ்பத்திரிகளில் உள்ளிருப்பு போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து மகப்பேறு சிகிச்சை மூத்த டாக்டரான ரமணி கூறும்போது, டாக்டர் அர்ச்சனா சர்மா மீது தவறான வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட டாக்டர் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும். நீண்ட கால கோரிக்கையான மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசின் சட்டம் தேவை. மருத்துவர்களை குற்றவாளிகளாகப் பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் மாற்றம் வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதிக இழப்பீடுகள் கேட்கும் வழக்குகளில் இருந்து மருத்துவ துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

Next Story