சித்தாள் வேலை செய்த பெண் கிணற்றில் பிணமாக கிடந்த மர்மம்


சித்தாள் வேலை செய்த பெண் கிணற்றில் பிணமாக கிடந்த மர்மம்
x
தினத்தந்தி 3 April 2022 1:45 AM IST (Updated: 3 April 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

சித்தாள் வேலைபார்த்த பெண் மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவரது இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆற்காடு

சித்தாள் வேலைபார்த்த பெண் மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவரது இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிணற்றில் மிதந்த பிணம்

ஆற்காட்டை அடுத்த பெரியகுக்குண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். கூலி தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 36). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகேஸ்வரி சித்தாள் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த 30-ந் தேதி மகேஸ்வரி, ராணிப்பேட்டையை அடுத்த தகர குப்பம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் அதுகுறித்து அவரது கணவர் ஜெய்சங்கர், ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பெரிய குண்டி பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் மகேஸ்வரி பிணமாக மிதந்தார். 

மறியல்

தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மகேஸ்வரியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், இறப்பிற்கு காரணமான நபர்களை கைது செய்யக் கோரியும் அவரது கணவர் ஜெய்சங்கர் மற்றும் பெண் வீட்டார், உறவினர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் தாலுகா போலீஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் உடனடி நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் காண்டீபன் உறுதி அளித்தார். அதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் ஆற்காட்டை அடுத்த பழையனூர் பகுதியைச் சேர்ந்தவர் மற்றும் அத்திட்டங்கல் பகுதியைச் சேர்ந்தவர் என 2 பேரை பிடித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story