கலைஞர் வீட்டு வசதி திட்ட பயனாளிகள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம்
கலைஞர் வீட்டு வசதி திட்ட பயனாளிகள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலைஞர் வீட்டு வசதி திட்ட பயனாளிகளை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் கட்டமாக கடந்த காலங்களில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்திற்கு பதிவு செய்து இதுவரை வீடுகள் கிடைக்கப்பெறாத பயனாளிகளை கண்டறியும் பணிகள் நடைபெற்றன. தற்போது வீடு இல்லாத ஏற்கனவே வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தன்னை பதிவு செய்து கொள்ளாத தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. மேலும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ் மற்றும் குணசேகரன் ஆகியோர் புதிய பயனாளிகளை தேர்வு செய்ய கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பயனாளிகளுக்கான அடிப்படை தகுதிகள், சரி பார்க்க வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஊராட்சி செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள 33 ஊராட்சி செயலாளர்கள், தா.பழூர், சுத்தமல்லி ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதார ஊக்குனர்கள், கிராம அளவிலான குழு கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story