விதிமுறைகளை பின்பற்றாத கல்குவாரிகள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


விதிமுறைகளை பின்பற்றாத கல்குவாரிகள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 April 2022 1:59 AM IST (Updated: 3 April 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கல்குவாரிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து கற்கள் மற்றும் ஜல்லிக்கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் அதிக வேகத்தில் செல்வதாகவும், பாதுகாப்பு இல்லாமல் அதிக பாரத்துடன் லாரிகள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது எனவும் விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரி மற்றும் ஜல்லி கற்கள் உடைக்கும் குவாரிகள் உரிமையாளர்களுடன் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

கல்குவாரிகள் மாலை 6 மணிக்கு மேல் இயங்க கூடாது. வெடி வைப்பதும் கூடாது. ஜல்லிக்கற்கள் உடைக்கும் குவாரிகள் இயங்கலாம். குவாரிகளில் இருந்து ஜல்லி உடைக்கும் குவாரிக்கு லாரிகள் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கற்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. இதனால் சாலை பழுது ஆகிறது. மேலும் அதிக வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது.
கடும் நடவடிக்கை

அதேபோன்று எம் சாண்டு ஜல்லிக்கற்கள் தயாரிக்கும் குவாரிகள் அதிகளவு பாரங்களை ஏற்றி செல்வதாகவும் புகார் வருகிறது.‌ பாரம் ஏற்றிச்செல்லும் போது தார்பாய் மூலம் மூடி எடுத்துச் செல்லப்படுவது இல்லை. இதனால் காற்றில் பறந்து வாகனங்களில் செல்பவர்கள் மீதும் நடந்து செல்பவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுகிறது.

ஆகவே லாரிகளில் அனுமதிக்கப்பட்ட எடை அளவை விட அதிக கற்கள் ஏற்றக்கூடாது. ஜல்லிக்கற்கள் எடுத்துச் செல்லும்போது தார்பாய் மூடி பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். லாரிகள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் கல் உடைக்கவும், வெடி வைக்கவும் கூடாது. இதனை குவாரி உரிமையாளர்கள் கட்டாயம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். அரசு தெரிவிக்கும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதனை உதாசீனப்படுத்த கூடாது. விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கட்டாயம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

 இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என வருவாய்த் துறையினர், கனிமவள துறையினர், வட்டாரப் போக்குவரத்து மற்றும் காவல்துறையினர் குவாரி செயல்படும் இடங்களில் முறையான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, கனிமவள உதவி இயக்குனர் பெர்னாட், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் மற்றும் அனைத்து தாசில்தார்கள், கல்குவாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story