வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்: 8-ம் வகுப்பு மாணவி-தாய் மாமன் பலி ஆத்தூர் அருகே சோகம்
ஆத்தூர் அருகே 8-ம் வகுப்பு மாணவி, தனது தாய்மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது வேன் மோதியதில் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
ஆத்தூர்,
8-ம் வகுப்பு மாணவி
ஆத்தூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலுமணி. இவருடைய மகள் அவந்திகா (வயது 13). இவள், வாழப்பாடி தாலுகா பொன்னாரம் பட்டி கிராமத்தில் தனது பாட்டி பூங்காவனம் வீட்டில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்தாள் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அவந்திகாவை அவரது தாய் மாமன் மாரிமுத்து (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் ஈச்சம்பட்டி கிராமத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
அதே நேரத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மூரார்பாளையம் பகுதியை சேர்ந்த 15 பேர் ஒரு வேனில் மூரார்பாளையத்தில் இருந்து புறப்பட்டு பழனி முருகன் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். கருத்த ராஜா பாளையம் என்ற இடத்தில் வேன் வந்த போது, அந்த வழியாக எதிரே வந்த மாரிமுத்துவின் மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராவிதமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து மற்றும் அவந்திகா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அதே நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சுமார் 100 மீட்டர் சென்று சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதி நின்றது. இருப்பினும் வேனில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மல்லியக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த பிரபு (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான மாணவி மற்றும் அவருடைய தாய் மாமாவின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.
Related Tags :
Next Story