கடந்த 2021-22 நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சிக்கு ரூ.250 கோடி சொத்து வரி பாக்கி


கடந்த 2021-22 நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சிக்கு ரூ.250 கோடி சொத்து வரி பாக்கி
x
தினத்தந்தி 3 April 2022 3:29 PM IST (Updated: 3 April 2022 3:29 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சிக்கு ரூ.250 கோடி வரை சொத்து வரி செலுத்தப்படாமல் பாக்கி உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சொத்து வரி

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துக்களுக்கு ஆண்டுக்கு இருமுறை சொத்து வரி விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சி பகுதியில் சொத்துக்கள் வைத்துள்ள 13 லட்சத்துக்கும் அதிகமானோர் சொத்து வரி செலுத்த வேண்டும். அந்த வகையில், கடந்த 2021-22 நிதி ஆண்டில் மட்டும் 8.20 லட்சம் பேரிடம் இருந்து ரூ.778.07 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீதம் உள்ள 4 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.250 கோடி பாக்கி உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தனியார் நட்சத்திர ஓட்டல் மட்டும் ரூ.16.9 கோடி, 2 பெரும் நிறுவனங்கள் ரூ.12.22 கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தாஜ் ஓட்டல்

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2021-22 நிதி ஆண்டில் ரூ.778.07 கோடி சொத்து வரியும், ரூ.462.35 கோடி தொழில் வரியும் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டலான தாஜ் கன்னிமாரா ரூ.16.9 கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளது. இதைப்போல் ஒரு ஐ.டி. நிறுவனம் ரூ.9.34 கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளது.

மேலும் முக்கிய நட்சத்திர ஓட்டல்கள், சினிமா திரையரங்குகள், தனியார் உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் சில குடியிருப்பு வாசிகளும் இதுவரை சொத்து வரி செலுத்தவில்லை. அந்த வகையில் கடந்த 2021-22 நிதி ஆண்டில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.250 கோடிக்கும் மேல் சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் உத்தரவின்பேரில், கமிஷனரின் வழிகாட்டுதலின்படி தற்போது சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வரிபாக்கி குறித்த ‘நோட்டீஸ்’ ஒட்டப்பட்டு, அந்த சொத்துக்கள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story