ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி கானா பாடகர் பலி


ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி கானா பாடகர் பலி
x
தினத்தந்தி 3 April 2022 3:43 PM IST (Updated: 3 April 2022 3:43 PM IST)
t-max-icont-min-icon

பரங்கிமலையில் ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கிய விபத்தில் கானா பாடகர் பரிதாபமாக பலியானார்.

பஸ் சக்கரத்தில் சிக்கி...

சென்னையை அடுத்த பம்மல் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சுடர் ஒளி (வயது 21). கானா பாடகரான இவர், தனது நண்பர்களுடன் நந்தம்பாக்கத்தில் உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் பம்மல் நோக்கி சென்றார்.

பரங்கிமலை சிமெண்ட் ரோடு சிக்னல் அருகே வந்த போது, அப்பகுதியில் சென்ற கார் மீது அவர் மோதியதில் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஆம்னி பஸ் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

டிரைவர் கைது

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனே ஓடிச்சென்று ஆம்னி பஸ் டிரைவரை அடித்து உதைத்தனர். இந்த நிலையில், பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சுடர் ஒளியை அங்கிருந்தவர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுடர் ஒளி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் நடராஜன் (53) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story