போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு; 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது
போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலத்தை பெண்ணிடம் அபகரித்த வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு
சென்னை கோடம்பாக்கம் ஜக்கிரியா காலனி 4-வது தெருவில் விஜயாமுரளி (வயது 58) என்ற பெண்ணுக்கு பூர்வீக சொத்தாக 2,160 சதுரஅடி நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இந்த நிலையில் தனது பூர்வீக சொத்து போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் மூலம் அபகரிக்கப்பட்டு உள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனருக்கு விஜயாமுரளி புகார் மனு அனுப்பினார். இதையடுத்து கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் மத்திய நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலி ஆவணங்கள்
விசாரணையில் விஜயாமுரளியின் தாத்தா பாலசுப்பிரமணியத்தின் மகளாக ராஜேஸ்வரி என்பவரை போலியாக சித்தரித்து ஆவணங்களை தயார் செய்து, ஆள்மாறாட்டம் மூலம் பெரும்பாக்கம் டி.எல்.எப்.கார்டன் சிட்டி பகுதியை சேர்ந்த சமீர் கோட்டக்கல் உமர் (40) என்பவரிடம் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்திருப்பதும், இந்த இடத்தை வாங்குவதற்கு அவர், விஜயாமுரளி சொத்தின் போலி ஆவணங்களை பயன்படுத்தி வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.
6 பேர் கைது
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் எஸ்.அனந்தராமன், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் சமீர் கோட்டக்கல் உமர், செம்மஞ்சேரி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு (43), பெரும்பாக்கம் டி.எல்.எப்.கார்டன் சிட்டி பகுதியை சேர்ந்த நவுசத் (40), மணலி கலைஞர் கருணாநிதி தெருவை சேர்ந்த சிந்து (29), மாத்தூர் எம்.எம்.டி.ஏ.பகுதியை சேர்ந்த யாசின் செரிப் (29), மணலி ராஜேந்திர பிரசாத் தெருவை சேர்ந்த மல்லிகா (42) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story