கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் கஞ்சா பயிரிட்ட தொழிலாளி கைது
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் கஞ்சா பயிரிட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோத்தகிரி
தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உத்தரவின்படி, சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கூக்கல் பகுதியிலிருந்து மசக்கல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு அருகே தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள காலி நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 3 கிலோ எடைகொண்ட 9 கஞ்சா செடிகளை வேருடன் அகற்றிய போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும், தேயிலைத் தொழிற்சாலையில் டீ மேக்கராகப் பணிபுரிந்து வந்த வெளிமாநிலத் தொழிலாளியான துலால் தப்பா (வயது 44) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியப் பின் சிறையில் அடைக்கப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகள் கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story