அரசு கொப்பரை கொள்முதல் மையங்களின் வியாபாரிகள் ஊடுருவல்


அரசு கொப்பரை கொள்முதல் மையங்களின் வியாபாரிகள் ஊடுருவல்
x
தினத்தந்தி 3 April 2022 6:22 PM IST (Updated: 3 April 2022 6:22 PM IST)
t-max-icont-min-icon

அரசு கொப்பரை கொள்முதல் மையங்களின் வியாபாரிகள் ஊடுருவல்

ரசு கொப்பரை கொள்முதல் மையங்களில் வியாபாரிகள் ஊடுருவி கொப்பரை விற்பனை செய்து கூடுதல் லாபம் ஈட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர் விலை சரிவு
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தேங்காய், இளநீர் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டும் விவசாயிகள் கொப்பரை உற்பத்தி செய்வதன் மூலம் கூடுதல் லாபம் ஈட்டி வந்தனர். ஆனால் கொப்பரையின் விலை சரிவால் உற்பத்தி விவசாயிகள் நஷ்டமடையும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த பிப்ரவரி மாதம் 14ந்தேதி முதல் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு  மூலம் கொப்பரைகளை விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்யத் தொடங்கியது. தற்போது வெளிச்சந்தையில் கொப்பரை விலை ஒரு கிலோ ரூ.90 என்ற அளவில் குறைந்துள்ள நிலையில் அரசு கொள்முதல் நிலையங்களில் ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.105 90க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.110க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளி சந்தையை விட நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் அரசு கொள்முதல் மையங்கள் மூலம் கொப்பரை விற்பனை செய்து வருகின்றனர்.
பல மடங்கு கொள்முதல்
இந்த நிலையில் ஒரு சில வியாபாரிகள் வெளி சந்தையில் குறைந்த விலைக்கு கொப்பரைகளை வாங்கி அரசு கொள்முதல் மையங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
உடுமலை பகுதியில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் இருந்தாலும் கொப்பரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். அவர்களிடம் நேரடியாக சென்று கொப்பரைகளை வாங்கும் வியாபாரிகள் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்தனர். ஆனால் தற்போது எண்ணெய் நிறுவனங்களை விட கூடுதல் விலை அரசு கொள்முதல் மையங்களின் கிடைப்பதால் ஒரு சில விவசாயிகளின் உதவியுடன் அரசு கொள்முதல் மையங்களின் விற்பனை செய்து கூடுதல் லாபம் ஈட்டுகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள கொப்பரைகளை விட இந்த ஆண்டு பல மடங்கு கொள்முதல் செய்யப்பட்டிருப்பதே இதற்கு ஆதாரமாகும். 
இவ்வாறு  விவசாயிகள் கூறினர்.
 குற்றச்சாட்டு உண்மையல்ல
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் கொப்பரை கொள்முதல் அதிகரித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை கைகொடுத்திருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாசன நீருக்குத் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் தேங்காய் உற்பத்தி அதிகரித்திருப்பதே கொப்பரை வரத்து அதிகரித்திருப்பதற்குக் காரணமாகும். மேலும் உண்மையான விவசாயிகள் மட்டுமே அரசு கொள்முதல் மையங்களின் விற்பனை செய்யும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொப்பரை விற்பனை செய்யும் விவசாயிகள் தங்களது ஆதார், வங்கி கணக்குப்புத்தகம், சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
மேலும் ஒவ்வொரு விவசாயியிடமும் ஒரு ஏக்கர் தென்னந்தோப்புக்கு 216 கிலோ கொப்பரை என்ற அளவிலேயே கொள்முதல் செய்யப்படும். அதிலும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2500 கிலோ மட்டுமே விற்பனை செய்ய முடியும். மேலும் அதற்கான பணம் அந்த விவசாயியின் வங்கிக்கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். எனவே அரசு கொள்முதல் மையங்களின் வியாபாரிகள் கொப்பரை விற்பனை செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கற்பனையானதாகும்.
இவ்வாறு  அதிகாரிகள் கூறினர்.

Next Story