ஊட்டியில் கோடை சீசன் களை கட்டியது
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக ஊட்டியில் கோடை சீசன் களை கட்டியது.
ஊட்டி,
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக ஊட்டியில் கோடை சீசன் களை கட்டியது.
கோடை சீசன்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோடை சீசனில் கண்காட்சிகள், கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. வார விடுமுறை நாட்களில் குளு குளு காலநிலை நிலவும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. கர்நாடகா, கேரளா மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் அதிகம் பேர் வந்தனர்.
இந்தநிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தனர். அவர்கள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பல்வேறு வகையான மலர்களை கண்டு ரசித்தனர். அதன் முன்பு செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, இலை பூங்கா, பெரணி இல்லம், கள்ளி செடிகள் வைக்கப்பட்ட கண்ணாடி மாளிகை போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். மலர் செடிகளுடன் கூடிய செல்பி ஸ்பாட்டில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள்
பெரிய புல்வெளி மைதானம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. அங்கு குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து பொழுதை கழித்தனர். ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரியின் நடுவே செயற்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது. அதையொட்டி மோட்டார் படகுகளில் சவாரி செய்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் குதிரை சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துக் குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.
தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் நின்றபடி இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். அங்கு புகைப்படம் எடுத்தும், நவீன தொலைநோக்கிகள் மூலம் பல்வேறு இடங்களை பார்வையிட்டும் வருகின்றனர். அதேபோல் பிற சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கோடை சீசன் தொடங்கியதுடன் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டி வருகிறது.
Related Tags :
Next Story