இறந்த 11 பெண்களின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம். விபத்துக்குள்ளான மினிவேனுக்கு தீ வைப்பு


இறந்த 11 பெண்களின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம். விபத்துக்குள்ளான மினிவேனுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 3 April 2022 8:16 PM IST (Updated: 3 April 2022 8:16 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே விபத்தில் இறந்த 11 பெண்களின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான மினிவேனுக்கு தீ வைக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே விபத்தில் இறந்த 11 பெண்களின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான மினிவேனுக்கு தீ வைக்கப்பட்டது.

மினிவேன் கவிழ்ந்து விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதி நெல்லிவாசல்நாடு ஊராட்சியில் உள்ள புலியூர் பகுதியை சேர்ந்த பெண்கள் 35 பேர்  சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதற்காக மினிவேனில் சென்றனர். 

மினிவேனை பரந்தாமன் என்பவர் ஓட்டி சென்றார். மினிவேன் மலைப்பாதையில் சாலைவசதி இல்லாத ஜல்லி கற்கள் கொண்ட சாலையில் மேல்நோக்கி சென்ற போது பாரம் தாங்காமல் பின்னோக்கி வந்து 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இதில் அதே ஊரை சேர்ந்த பரசுராமன் மனைவி துர்கா (வயது 40), மகள்கள் பரிமளா (12), பவித்ரா (18), வேந்தன் மனைவி சுகந்திரா (55), துக்கன் மனைவி செல்வி (35), குள்ளப்பன் மனைவி மங்கை (60), துக்கன் மகள் ஜெயபிரியா (16), சிதம்பரம் மனைவி சின்னதிக்கி (22), அனுமன் மகள் அலமேலு (12), ஆட்டுக்காரதுக்கன் மனைவி திக்கியம்மாள் (30), நாராயணசாமி மகள் சென்னம்மாள் (13) ஆகிய 11 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் 24 பேர் பலத்த காயத்துடன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே இடத்தில் அடக்கம்

இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த 11 பேரின் உடல்களும் நேற்று முன்தினமே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் புலியூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு 11 பேரின் உடல்களை ஒரே இடத்தில் வைத்து பூஜைகள் செய்து அடக்கம் செய்தனர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இறந்தவர்களின் உறவினர்கள் விடிய விடிய கதறி அழுதவாறு இருந்தனர்.

இதனிடையே விபத்துக்குள்ளான மினிவேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 11 பேரை பலிவாங்கிய வேன் என்று ஆத்திரத்தில் எரிக்கப்பட்டதா? அல்லது விபத்துக்கான காரணத்தை மறைப்பதற்காக எரிக்கப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story