சந்திராப்பூரில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருட்களால் பரபரப்பு


வானில் இருந்து விழுந்த வளையம்
x
வானில் இருந்து விழுந்த வளையம்
தினத்தந்தி 3 April 2022 9:04 PM IST (Updated: 3 April 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

சந்திராப்பூரில் வானத்தில் இருந்து விழுந்த மர்ம இரும்பு வளையம், உருளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை, 
சந்திராப்பூரில் வானத்தில் இருந்து விழுந்த மர்ம இரும்பு வளையம், உருளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வானில் இருந்து விழுந்த வளையம்
சந்திராப்பூர் மாவட்டம் சிந்தேவாகி தாலுகாவில் உள்ள லட்போரி கிராமத்தில் உள்ள மைதானத்தில் நேற்று  இரவு 7.50 மணியளவில் இரும்பு வளையம் ஒன்று கிடப்பதை பொதுமக்கள் பார்த்தனர். 3 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த இரும்பு வளையம் சூடாக இருந்துள்ளது. திடீரென மர்மமாக கிடந்த அந்த இரும்பு வளையத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வளையம் வானத்தில் இருந்து விழுந்ததாக பொதுமக்கள் இடையே தகவல் பரவியது. எனவே அந்த வளையத்தை பார்க்க அங்கு அதிகளவில் பொதுமக்கள் திரண்டனர்.
இந்தநிலையில் தகவல் அறிந்து சென்ற வருவாய் துறை அதிகாரிகள் மர்ம இரும்பு வளையத்தை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பினர்.
 இது குறித்து மாவட்ட கலெக்டர் அஜய்குல்கனே கூறுகையில், ''அந்த இரும்பு வளையம் முன்பு அந்த பகுதியில் இல்லை. எனவே அது வானத்தில் இருந்து விழுந்து இருக்கலாம். இரும்பு வளையம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு நடத்துவார்கள்" என்றார்.
இரும்பு உருளை மீட்பு
இதற்கிடையே அருகில் உள்ள பாவன்பார் கிராமத்தில் 1.5 அடி விட்டம் கொண்ட இரும்பு உருளை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து கலெக்டர் அஜய்குல்கனே கூறுகையில், "சிந்தேவாகி தாலுகாவில் உள்ள மற்றொரு கிராமமான பவான்பாரில் சிலிண்டர் போன்ற 1 முதல் 1.5 அடி விட்டம் கொண்ட உலோக பொருள் மீட்கப்பட்டுள்ளது. அது ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளது. இதேபோல வேறு எந்த கிராமத்திலாவது பொருட்கள் விழுந்துள்ளதா என ஆய்வு செய்ய கிராம நிர்வாக அதிகாரிகளை அனுப்பி உள்ளோம்" என்றார்.
பரபரப்பு
மராட்டியத்தின் ஒரு சில பகுதிகள் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் வானத்தில் இருந்து தீப்பிடித்தப்படி மர்ம பொருட்கள் விழுந்ததாக நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இது தொடர்பான வீடியோவை பலர் சமூகவலைதளங்களில் பகிர்ந்து இருந்தனர். இந்தநிலையில் மராட்டிய கிராமங்களில் மர்மபொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் செயற்கைகோள்கள் செலுத்தப்பட்ட பிறகு விழும் ராக்கெட் பூஸ்டர்களின் துண்டுகளாக இருக்கலாம் என அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Next Story