விதிகளை மீறிய நைஸ் நிறுவனம் மீது நடவடிக்கை; கர்நாடக அரசுக்கு தேவேகவுடா வலியுறுத்தல்


விதிகளை மீறிய நைஸ் நிறுவனம் மீது நடவடிக்கை; கர்நாடக அரசுக்கு தேவேகவுடா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 April 2022 9:18 PM IST (Updated: 3 April 2022 9:18 PM IST)
t-max-icont-min-icon

விதிகளை மீறிய நைஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை தேவேகவுடா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடிதம் எழுதியுள்ளேன்

  கர்நாடகத்தில் நைஸ் நிறுவனம் அரசின் அனுமதி பெறாமல் சுங்க கட்டணத்தை அதிகரித்துள்ளது. அந்த நிறுவனம் அரசின் அனைத்து விதிமுறைகளையும் காற்றில் பறக்க விட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு கும்மகனகட்டா பகுதியில் அரசு வழங்கியுள்ள 41 ஏக்கர் நில ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மேல்-சபையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

  ஆனால் எந்த மந்திாியும் சரியான பதிலை கூறவில்லை. முதல்-மந்திரி, தலைமை செயலாளர் மற்றும் தொழில்துறை செயலாளருக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் எனது கடிதத்திற்கு அரசு பதில் அளிக்கவில்லை. நைஸ் விவகாரம் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவை அடிக்கடி மாற்றினர். மந்திரி மாதுசாமி, நைஸ் நிறுவன விவகாரங்கள் சரியாக இல்லை என்று கூறியுள்ளார். அதனால் அந்த நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அரசுக்கு ஆலோசனை

  நைஸ் நிறுவனம் குறித்து சட்டசபை கூட்டு குழுவை அமைத்தனர். அந்த குழு விசாரித்து அரசுக்கு அறிக்கை வழங்கியது. சாலை அமைக்காமலேயே சுங்க கட்டணம் வசூலிக்கிறார்கள். மைசூரு ரோடு அமைத்த பிறகு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று விதிமுறையில் கூறப்பட்டு இருந்தது. சட்டசபை குழு, சுங்க கட்டணத்தை வசூலிப்பதை ரத்து செய்யும்படி அரசுக்கு ஆலோசனை கூறியது.

  ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு நைஸ் நிறுவனத்தினர், ஐகோர்ட்டில் இடைக்கால தடை ஆணையை பெற்றனர். சட்டசபை குழுவின் ஆலோசனையை மீறி சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் ரூ.3 கோடி வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நமது கர்நாடக தொழில் வளர்ச்சி வாரிய நிலத்தை ரூ.14 கோடிக்கு மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு நைஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

நிவாரணம் வழங்கவில்லை

  இப்போது மேலும் ரூ.100 கோடிக்கு மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு நிலத்தை விற்று பணம் பெற அந்த நிறுவனம் தயாராகியுள்ளது. நான் மிகுந்த விருப்பப்பட்டு நைஸ் சாலை அமைக்கும் திட்டத்தை தொடங்கினேன். ஆனால் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு அந்த நிறுவனம் சரியான முறையில் நிவாரணம் வழங்கவில்லை. இது எனது கனவு திட்டம் ஆகும். ஆனால் அந்த நிறுவனம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது.

  அரசின் நிலத்தை அடமானம் வைத்து அந்த நிறுவனம் கடன் பெற்றுள்ளது. இது எனது மனதுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடக்கம் தான். வரும் நாட்களில் நான் போராட்டம் நடத்துவேன்.

பரபரப்பாக காணப்படுகிறார்

  நான் எழுதிய கடிதத்திற்கு பொதுப்பணித்துறை மந்திரி மட்டுமே பதில் கடிதம் எழுதினார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பாவம், மிகவும் பரபரப்பாக காணப்படுகிறார். இந்த அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்ற வேண்டும். நைஸ் நிறுவனம் குறித்து சட்டசபை கூட்டு குழு வழங்கியுள்ள அறிக்கையை அமல்படுத்த வேண்டும்.
  இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story