விலைவாசி உயா்வை மூடிமறைக்க மக்களின் கவனத்தை திருப்பும் பா.ஜனதா; சித்தராமையா குற்றச்சாட்டு
விலைவாசி உயா்வை மூடிமறைக்க மக்களின் கவனத்தை பா.ஜனதா திசை திருப்புகிறது என சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மதசார்பின்மை, அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஹிஜாப், ஹலால் எதுவாக இருந்தாலும் சரி நாங்கள் அரசியல் சாசனத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதன்படி நாங்கள் பேசி வருகிறோம். சட்டசபையில் பசுவதை சட்ட மசோதா, மதமாற்ற சட்ட மசோதாவை ஆதரித்தது யார்?. ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் அவற்றை ஆதரித்தனர். மதசார்பின்மை கொள்கையில் பிடிப்பாக இருக்க வேண்டும். நாங்கள் அந்த பிடிப்பில் இருக்கிறோம்.
விலைவாசி உயர்வை மூடிமறைக்க மத விஷயங்களை பா.ஜனதாவினர் ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்புவதே அவர்களின் நோக்கம். அவர்களுக்கு மனிதத்துவம் உள்ளதா?. ஹிஜாப், ஹலால், முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை என்று கூறி சமுதாயத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகிறார்கள்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், “சட்டசபையில் மதமாற்ற சட்ட மசோதாவை ஆதரித்தது யார்?. இப்போது குமாரசாமி காங்கிரசை குறை சொல்கிறார். பேசினால் மட்டும் போதாது. குமாரசாமி பெரியவர். அவருக்கு சக்தி அதிகமாக உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் பணியை செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.
Related Tags :
Next Story