கடலூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது


கடலூர் அருகே  கியாஸ் சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 3 April 2022 10:29 PM IST (Updated: 3 April 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தொகுப்பு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

நெல்லிக்குப்பம்

கியாஸ் கசிவால் தீ

கடலூர் அருகே உள்ள கலையூர் இரண்டாயிர வளாகம் கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி(வயது 50). இவர் தானே புயலில் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார். 
நேற்று காலை வழக்கம்போல் திலகவதி கியாஸ் அடுப்பில் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்து மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திலகவதி தீயை அணைக்க முயன்றார். 

சிலிண்டர் வெடித்து சிதறியது

அப்போது கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீ்ட்டின் முன்பகுதி சுவர் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் வெளியில் சிதறி கிடந்தன. படுகாயம் அடைந்த திலகவதி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்ததால் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

போலீஸ் விசாரணை

பின்னர் காயமடைந்த திலகவதியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story