சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 45 பேர் காயம்
வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 45 பேர் காயம் அடைந்தனர்.
வேப்பந்தட்டை,
ஜல்லிக்கட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 580 காளைகளும், 290 வீரர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை நடைபெற்றது. அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதிக்கான மருத்துவ சான்றிதழ்களும், கொரோனா பரிசோதனை சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
சீறிப்பாய்ந்த காளைகள்
ஜல்லிக்கட்டு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. வாடிவாசலில் இருந்து காளைகள் அலங்கரிக்கப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. அப்போது ஒலிப்பெருக்கியில் காளையின் உரிமையாளர் பெயர், ஊர் போன்ற விவரங்களும், பரிசு குறித்த தகவல்களும் அறிவிக்கப்பட்டன.
வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. ஆக்ரோஷத்துடன் துள்ளிக்குதித்த காளைகளை கண்டு மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். பாய்ச்சல் காட்டி பயமுறுத்திய காளைகளை வீரர்கள் சிலர் பாய்ந்து சென்று அதன் திமிலை பிடித்து அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆராவாரம் செய்து மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
45 பேர் காயம்
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 25 மாடுபிடி வீரர்கள் உள்பட மொத்தம் 45 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, மின்விசிறி, சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனர். மேலும், அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அரும்பாவூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட கருப்புநிற காளை ஒன்று வீரர்கள் பகுதியை தாண்டி சென்று வெளியேறாமல் அந்தப் பகுதியிலேயே வட்டமிட்டு நின்றது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மைதானத்திலேயே படுத்துக்கொண்டது. பின்னர் வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து அந்த காளையை சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்று வெளியே விட்டனர். இதனால் சிறிது நேரம் ஜல்லிக்கட்டு தடைபட்டது.
Related Tags :
Next Story