திருவையாறு பகுதியில் பலத்த காற்றுடன் மழை: 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன


திருவையாறு பகுதியில் பலத்த காற்றுடன் மழை: 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 4 April 2022 12:15 AM IST (Updated: 3 April 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

திருவையாறு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருைவயாறு:-

திருவையாறு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வாழை சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி நடைபெறும். அதுதவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும்.
மேலும் வாழை, கரும்பு, உளுந்து, எள், நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு, பச்சைபயறு உள்ளிட்டவைகளும் சாகுபடி செய்யப்படுகிறது. காவிரி ஆற்றுப்பாசன பகுதிகளான திருவையாறு, கும்பகோணம் பகுதிகளில் வாழை அதிகஅளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தன

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்தது. இந்த மழையினால் திருவையாறு, ஆச்சனூர், சாத்தனூர் பகுதிகளில் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.
வாழைக்குலைகளுடன் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த சுமார் 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன. இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் பல இடங்களில் சாயும் நிலையில் வாழை மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் சாய்ந்துவிடாமல் இருக்க கம்புகளை ஊன்றி விவசாயிகள் தடுப்பு வைத்துள்ளனர்.

காப்பீடு திட்டம்

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்துவிட்டன. இதனால் ரூ.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி வாழை சாகுபடி செய்தோம். ஏற்கனவே கடந்த ஆண்டு பெய்த மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு முழுமையான அளவு நிவாரணம் வந்து சேரவில்லை.
தற்போது வாழை மரங்களும் சாய்ந்துவிட்டதால் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறோம். நெல்லுக்கு பயிர்க்காப்பீடு இருப்பதை போல் வாழைகளுக்கும் பயிர்க்காப்பீடு வழங்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்த வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story