சுட்டெரிக்குது வெயில் கறம்பக்குடி பகுதியில் ஏரி, குளங்கள் வறண்டன தண்ணீர் இன்றி கால்நடைகள் தவிப்பு
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் கறம்பக்குடி பகுதியில் உள்ள ஏரி குளங்கள் வறண்டன. தண்ணீர் இன்றி கால்நடைகள் தவித்து வருகின்றன.
கறம்பக்குடி:
ஏரி, குளங்கள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மற்ற 29 ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. கறம்பக்குடி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களின் தண்ணீர் மூலமும், ஆழ்குழாய் பாசனம் வாயிலாகவும் மட்டுமே இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்த நிலையில் ஏரி குளங்கள் நிரம்பி இருந்தன. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்திருந்தது. இதனால் கோடை வெயிலை சமாளித்துவிடலாம் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இதற்கு மாறாக கடந்த ஒரு மாதமாக கறம்பக்குடி பகுதியில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் ஒரிரு முறை கோடை மழை பெய்தபோதும் கறம்பக்குடியில் மழை இல்லை.
விவசாயிகள் கவலை
இதனால் கறம்பக்குடி பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் படிப்படியாக நீர் குறைந்து தற்போது வறண்டு கிடக்கின்றன. கறம்பக்குடியில் பெரியகுளம், குமரகுளம், புதுக்குளம், ராட்டினா குளம் உள்ளிட்ட பல பாசன குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டுவிட்டது. இதே போல் கிராம பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான பாசன குளங்களிலும் நீர் வற்றிவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மேலும் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வழக்கமாக தண்ணீர் குடிக்கும் குளங்களில் நீர் இல்லாததால் தவித்து வருகின்றன. தண்ணீரை தேடி அலைந்து திரியும் நிலை உள்ளது. எனவே கால்நடைகளின் வசதிக்காக கிராம பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story