சிந்தகம்பள்ளியில் யுகாதி பண்டிகை கொண்டாட்டம் பக்தர்கள் மீது நடந்து சென்று ஆசி வழங்கிய பூசாரி
சிந்தகம்பள்ளியில் யுகாதி பண்டிகையையொட்டி பக்தர்கள் மீது பூசாரி நடந்து சென்று ஆசி வழங்கினார்.
பர்கூர்:
பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தெலுங்கு வருட பிறப்பையொட்டி அங்குள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து வேப்ப இலை, வெல்லம் வைத்து வணங்கி, அதை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை முத்துமாரியம்மன் சாமி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பூசாரி கரகத்தை எடுத்துகொண்டு ஊர்வலமாக சென்றார். அப்போது ஒவ்வொரு வீட்டின் முன்பும் அந்த கரகத்திற்கு சிறப்பு பூஜை செய்து ஆடுகளை பலியிட்டு பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் ஆண், பெண் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மாட்டு மந்தையில் உள்ள காளிக்கோவில் அருகில் இருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை சாலையில் ஈரத்துணியுடன் தரையில் படுத்து கொண்டனர். அவர்கள் மீது கரகம் எடுத்து வந்த பூசாரி நடந்து சென்று ஆசி வழங்கினார். பின்னர் கோவில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில், கரகத்துடன் பூசாரி இறங்கியவுடன், அவரை தொடர்ந்து பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். பின்னர் பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story