பள்ளி வளாகத்தில் ஆபத்தான கிணறு இரும்பு வலைகள் கொண்டு மூடப்பட்டது


பள்ளி வளாகத்தில் ஆபத்தான கிணறு இரும்பு வலைகள் கொண்டு மூடப்பட்டது
x
தினத்தந்தி 4 April 2022 12:14 AM IST (Updated: 4 April 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் ஆபத்தான கிணறு இரும்பு வலைகள் கொண்டு மூடப்பட்டது.

பெரம்பலூர், 
பள்ளி வளாகத்தில் கிணறு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி அருகே கிராம சேவை மைய கட்டிடம், அங்கன்வாடி, துணை சுகாதார நிலையம், ரேஷன் கடை ஆகியவையும் உள்ளன. அங்குள்ள கட்டிடங்களை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் வளாகத்திலேயே தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பொது கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிணற்றில் இருந்து எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி கிணறு இரும்பிலான வலைகள் கொண்டு மூடப்படாமல் இருந்தது.
இரும்பு வலை...
இதனால் தினமும் மதிய வேளையில் பள்ளி, அங்கன்வாடி குழந்தைகள் அந்த கிணறு அருகே சென்று விளையாடுவதுடன், அதனை எட்டி பார்த்து வந்தனர். இது தொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகள், அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் கிணற்றுக்கு இரும்பு வலைகள் கொண்டு மூடப்படவில்லை. 
எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளி, அங்கன்வாடி வளாகத்தில் உள்ள திறந்தவெளி பொது கிணற்றுக்கு இரும்பிலான வலைகள் கொண்டு மூட வேண்டும் என்று  குழந்தைகளின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி:
இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழ் கடந்த 28-ந்தேதி படத்துடன் செய்தி வெளியிட்டது. இதனைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் உள்ள பொது கிணற்றை இரும்பிலான வலைகள் கொண்டு மூடினர். இதையடுத்து, நடவடிக்கை எடுத்த அதிகாரிகளும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் பள்ளி, அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

Next Story