வெண்ணாற்று பாலத்தில் பழுதாகி நின்ற ‘கிரேன்’ ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
விண்ணமங்கலம் வெண்ணாற்று பாலத்தில் கிரேன் பழுதாகி நின்றதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி:-
விண்ணமங்கலம் வெண்ணாற்று பாலத்தில் கிரேன் பழுதாகி நின்றதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அகலப்படுத்தும் பணி
பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இதையொட்டி ஆங்காங்கே மின் கம்பங்களை நடும் பணியிலும், சிறிய அளவிலான பாலங்களை பெயர்த்து எடுத்து புதிய பாலங்கள் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இந்த பகுதியில் கலவை எந்திரங்கள், கிரேன்கள், பொக்லின் எந்திரங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று மதியம் பூதலூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி சென்ற கிரேன் ஒன்று விண்ணமங்கலம் வெண்ணாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. பாலத்தின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்களில் வந்தவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதை அறிந்த பூதலூர் போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் கிரேனில் பழுது நீக்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. கிரேன் பழுதாகி நின்றதால் பூதலூர் -திருக்காட்டுப்பள்ளி இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story