ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர்.
முசிறி:
கொள்ளை முயற்சி
திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் முசிறி பழைய பஸ் நிலையம் அருகே ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் அருகிலேயே அதற்கான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் அந்த ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது சிறிது நேரத்திலேயே அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. இதனால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி, இன்ஸ்பெக்டர் விதுன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் ஆகியோர் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்று அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அதில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களின் உருவம் பதிவாகியிருந்தது.மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வங்கி அருகில், மக்கள் அதிகம் வாழும் பகுதியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story