நெரிசல் மிகுந்த பகுதிகளில் நடை மேம்பாலம் அமைக்க ஆய்வு
நெரிசல் மிகுந்த பகுதிகளில் நடை மேம்பாலம் அமைப்பதற்காக தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருச்சி:
திருச்சி மாநகரில் சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் சாலை சந்திப்புகளில் பாதசாரிகள், மாணவர்கள் அதிக அளவில் சாலையை கடந்து வருகிறார்கள். குறிப்பாக மாணவர்கள் பாதுகாப்பு இல்லாமல் சாலையை கடப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பாதசாரிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நகரின் நெரிசலான பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், மாநகர போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கொண்ட தணிக்கை குழுவினர் நடைமேம்பாலம் அமைக்க வேண்டிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக சத்திரம் பஸ் நிலைய பகுதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மாணவர்கள் சாலையில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதேபோல் காலேஜ் ரோடு, சென்னை ட்ரங்க் ரோடு, கரூர் ரோடு, மேலசிந்தாமணி சாலை ஆகியவை பாதசாரிகள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story