சரக்கு வேன் மீது தனியார் பஸ் மோதல்; மாடுபிடி வீரர் பலி


சரக்கு வேன் மீது தனியார் பஸ் மோதல்; மாடுபிடி வீரர் பலி
x
தினத்தந்தி 4 April 2022 3:50 AM IST (Updated: 4 April 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு வேன் மீது தனியார் பஸ் மோதியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.

சமயபுரம்:

மாடுபிடி வீரர்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடி அரிசன தெருவை சேர்ந்த ரவியின் மகன் அஜித்குமார்(வயது 24). மாடுபிடி வீரரான இவர் நேற்று பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக, தனக்கு சொந்தமான காளையை ஒரு சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
அவருடன் திருச்சி தாரநல்லூர் தோப்பு தெருவைச் சேர்ந்த ரமேசின் மகன் ராசா(18), மாகாளிகுடியை சேர்ந்த குமாரின் மகன் அரவிந்த்(27), ரவியின் மகன் சிவா(18), கண்ணனின் மகன் பிரதாப்(17), லால்குடி அருகே உள்ள வளவனூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன்(30), ராஜிகண்ணாவின் மகன் ராகவன்(25), மருதூரைச் சேர்ந்த ரவியின் மகன் மருதுபாண்டி(20) ஆகியோரும் சென்றனர்.
சாவு
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிறுகனூரை அடுத்த கொணலை அருகே சென்றபோது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பஸ், சரக்கு வேன் மீது மோதியது. இதில் வேனின் பின்பகுதியில் காளையை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த அஜித்குமார் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் வேனில் சென்ற 7 பேரும் காயமடைந்தனர். காளை உயிர் தப்பியது.
டிரைவர் கைது
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் அழகரை(40) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story