தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் திடீர் முற்றுகை
பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி:
பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம், கோவில்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மானாவாரி விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், 2020-2021-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடுத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் தலைமை தாங்கினார். கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் முன்னாள் துணைத்தலைவர் ஜெயச்சந்திரன், மானாவாரி விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.நவநீதன், கரிசல்பூமி விவசாயிகள் சங்க கோவில்பட்டி செயலாளர் என்.நவநீதகிருஷ்ணன், விளாத்திகுளம் செயலாளர் தனபதி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கலெக்டரிடம் மனு
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 5 பேர் மட்டும் மாவட்ட கலெக்டரை சந்திக்க அனுமதி அளிப்பதாக தெரிவித்தனர். ஆனால், விவசாயிகள் அனைவரும் உள்ளே செல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால், கலெக்டர் இங்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனால் தொடர்ந்து போராட்டம் நடந்தது. அதன்பிறகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 15 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் விவசாய பிரதிநிதிகள் 15 பேர் கலெக்டரிடம் சென்று ஒரு மனு கொடுத்தனர்.
பயிர் காப்பீடு
அந்த மனுவில், “கடந்த 2020-21-ம் ஆண்டில் மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சூரியகாந்தி போன்ற பல்வேறு பயிர்கள் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்து இருந்தோம். பருவம் தவறி பெய்த மழையால் இந்த பயிர்கள் அனைத்தும் முழுமையாக அழிந்துவிட்டன. விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்து உள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. மக்காச்சோளம் பயிருக்கு மட்டும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டது. அதிலும் ஏராளமான குழப்பங்கள் உள்ளன. பல கிராமங்கள் விடுபட்டு உள்ளன. எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், பயிர் காப்பீட்டு தொகையை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story