கோட்டூர் பகுதியில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
கோட்டூர் பகுதியில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்:-
கோட்டூர் பகுதியில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படிக்கட்டில் பயணம்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மன்னார்குடி, திருவாரூர் ஆகிய நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது.
மாணவர்கள் பலர் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். சில இடங்களில் மாணவிகள் வாடகை வேனை ஏற்பாடு செய்து அதில் பயணித்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் 3 பேர் வரை பயணம் செய்ய வேண்டிய நிலையும் உள்ளது.
கிராம மக்கள் கவலை
காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நிற்பதில்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கோட்டூர் பகுதியில் பஸ் போக்குவரத்து பற்றாக்குறையால் பொதுமக்கள் தினசரி அவதிப்பட வேண்டி உள்ளது.
எனவே கோட்டூரில் இருந்து திருப்பத்தூர் வரை காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story