சென்னையில் சீனிவாச திருக்கல்யாண ஏற்பாடுகள் தீவிரம்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கவிருப்பதையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சீனிவாச திருக்கல்யாணம்
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தீவுத்திடலில் வருகிற 16-ந்தேதி மாலை 6 மணி அளவில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக்குழு தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி தலைமையில் தீவுத்திடலில் பூமி பூஜை நேற்று நடந்தது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர்கள் குழுத்தலைவர் ஓய்.வி. சுப்பாரெட்டி தொடங்கி வைத்து, மேடை அமைப்பதற்கான வரைபடத்தை வெளியிட்டார். தமிழக சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்துரி முன்னிலை வகித்தார். பின்னர் மேடை அமைக்கப்படும் பகுதி, பார்வையாளர்கள் அமரும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்
பின்னர் ஓய்.வி.சுப்பாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை தீவுத்திடலில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்டமான முறையில் சீனிவாச திருகல்யாணம் நடத்தப்படுகிறது. இதற்காக திருமலையிலிருந்து உற்சவர் கொண்டுவரப்படுவதுடன் பண்டிதர்களும் திருமலையிலிருந்து வர உள்ளனா். தமிழக முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமலையில் திருக்கல்யாணம் பார்க்க முடியாதவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் திருக்கல்யாணம் பார்ப்பதற்காக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு குடிநீர், உணவு, மருத்துவ வசதி, கழிப்பறை வசதிகள் செய்யப்பட உள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பக்தர்கள் இருக்கும் பகுதிக்கே உற்சவர் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி, திருச்சி, கோவை, மதுரை நகரங்களில் 3 அல்லது 4 மாத இடைவெளியில் திருக்கல்யாணம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தியாகராயநகரில் புதிதாக கட்டப்படும் பத்மாவதி தாயார் கோவில் பணிகள் இந்த ஆண்டு நிறைவு செய்யப்பட்டு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உள்ளூர் திருமலை-திருப்பதி அறங்காவலர் சங்கர், உள்ளூர் ஆலோசனைக்குழு துணைத்தலைவர் பிரபாகர் ரெட்டி, உறுப்பினர்கள் பி.வி.ஆர்.கிருஷ்ணா ராவ், மோகன்ராவ், கார்த்திகேயன் உள்ளீட்டோர் பங்கேற்றனர்.
தமிழக சுற்றுலாத்துறை கோரிக்கையை ஏற்று 1,000 பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்ய அனுமதி
தமிழக சுற்றுலா துறை சார்பில் தினமும் 150 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி அளித்திருந்தது. இதனை ஆயிரமாக உயர்த்த தமிழக சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்துரி, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்கள் குழுத்தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டியிடம் மனு அளித்தார். மேடையிலேயே உடனடியாக இதற்கான அனுமதியை வழங்கினார். ஓரிரு நாட்களில் இது அமலில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story