குறைதீர்வு நாள் கூட்டத்தில் அடுத்தடுத்து நடந்த போராட்டங்களால் பரபரப்பு


குறைதீர்வு நாள் கூட்டத்தில் அடுத்தடுத்து நடந்த போராட்டங்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 April 2022 7:36 PM IST (Updated: 4 April 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அடுத்தடுத்து நடந்த தர்ணா போராட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அடுத்தடுத்து நடந்த தர்ணா போராட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் வரவேற்றார்.

கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, அடையாள அட்டை, வீட்டுமனை பட்டா, இலவச வீடு, சாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு அளித்தனர். 
மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். 

 பிரதமரின் இலவச வீடு



திருவண்ணாமலை தாலுகா மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த காசி என்பவர் கலெக்டர் அலுவலக போர்டிகோ முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது காசி கூறுகையில், தனக்கு பிரதமரின் இலவச வீடு ஒதுக்கப்பட்டு, பணி ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். 

இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் அவரை போலீசார் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க அழைத்து சென்றனர்.

தர்ணா போராட்டம்




இந்த சம்பவம் முடிந்த சிறிது நேரத்திலேயே ஆரணி தாலுகா தாமரைப்பாக்கம் லாடவரம் பகுதியை சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் மனைவி பார்வதி, அவரது மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘எங்களது நிலத்தில் பக்கத்து நிலத்துகாரர் பைப் லைனை உடைத்து விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகிறார். மேலும் கொலை மிரட்டல் விடுகிறார். 

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். பின்னர் அவர்களை போலீசார் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க அழைத்து சென்றனர்.

அடுத்தடுத்து நடந்த தர்ணா போராட்டங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story