டீசல் விலை உயர்வால் காசிமேடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு


டீசல் விலை உயர்வால் காசிமேடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 4 April 2022 8:20 PM IST (Updated: 4 April 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை உயர்வால் குறைவான விசைப்படகுகளே கடலுக்குள் சென்றதால், சென்னை காசிமேடு மார்க்கெட்டில் மீன்கள் விலை அதிகரித்துள்ளன.

மீன்கள் விலை

டீசல் விலை உயர்வு காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் செல்லும் விசைப்படகுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போதைய சூழலில் 10 முதல் 20 சதவீத விசைப்படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. விடுமுறை நாளான நேற்று காசிமேட்டில் மக்கள் கூட்டம் நிறைவாக இருந்தபோதிலும், குறைந்த அளவிலேயே விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்று திரும்பின.

இதன் காரணமாக பெரிய வகை மீன்கள் அவ்வளவாக பிடிபடவில்லை. சிறிய வகை மீன்களான சங்கரா, நெத்திலி, கவளை, தும்புலி வகை மீன்கள் அதிகமாக பிடிபட்டன. கடலுக்கு செல்லும் விசைப்படகுகள் குறைந்திருக்கும் நிலையில் மீன்கள் விலை அதிகரித்து உள்ளன.

இதுகுறித்து காசிமேடு மீன் வியாபாரிகள் கூறியதாவது:-

அதிகரிக்க வாய்ப்பு

டீசல் விலை உயர்வு எதிரொலியாக கடலில் சென்று மீன்பிடிக்க விசைப்படகு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மீன்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் மீன்கள் விலை சுமார் ரூ.100 முதல் ரூ.200 வரை உயர்ந்திருக்கின்றன.

தற்போதைய சூழலில் இந்த நிலை இன்னும் நீடிக்கும் பட்சத்தில் கடலுக்கு செல்லும் விசைப்படகுகள் எண்ணிக்கை இன்னும் குறையும் அபாயம் உள்ளது. மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. எனவே மீன்கள் விலை வெகுவாக உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விலை நிலவரம்

காசிமேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்ட மீன்கள் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்)

சங்கரா (சிறியது) -ரூ.180 முதல் ரூ.200 வரை, சங்கரா (பெரியது) -ரூ.280 முதல் ரூ.350 வரை, நெத்திலி (சிறியது) -ரூ.140 முதல் ரூ.160 வரை, நெத்திலி (பெரியது) -ரூ.240 முதல் ரூ.250 வரை, வஞ்சீரம் (சிறியது) -ரூ.500 முதல் ரூ.520 வரை, வஞ்சீரம் (பெரியது) -ரூ.700 முதல் ரூ.750 வரை, இறால் (சிறியது) -ரூ.180 முதல் ரூ.220 வரை, இறால் (பெரியது) -ரூ.350 முதல் ரூ.400 வரை, நண்டு (சிறியது) -ரூ.230 முதல் ரூ.250 வரை, நண்டு (பெரியது) -ரூ.350 முதல் ரூ.450 வரை, சீலா-ரூ.210 முதல் ரூ.220 வரை, ஏரி வவ்வால்-ரூ.170 முதல் ரூ.220 வரை, கட்லா- ரூ.185 முதல் ரூ.200 வரை, ரோகு-ரூ.200 முதல் ரூ.220 வரை, கவளை-ரூ.60 முதல் ரூ.70 வரை, வவ்வால்-ரூ.650 முதல் ரூ.750 வரை, கிளிச்சை-ரூ.70 முதல் ரூ.90 வரை, அயிலா-ரூ.200 முதல் ரூ.250 வரை, தும்புலி-ரூ.180 முதல் ரூ.200 வரை.

இதுதவிர சில்லறை விலையில் மீன்கள் ரூ.100 முதல் ரூ.200 வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story