பழனி முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை உற்சவம்


பழனி முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை உற்சவம்
x
தினத்தந்தி 4 April 2022 8:29 PM IST (Updated: 4 April 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் நடந்த பங்குனி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி:
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சன்னியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடந்தது. 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
பங்குனி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் பொதுதரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 120 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்துகொண்டனர்.

Next Story