விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து சமத்துவபுரத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பில் 100 வீடுகளுடன் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் நடக்கிறது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பெரியார் நினைவு சமத்துவபுரத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அங்குள்ள பெரியாரின் உருவ சிலையை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு சமத்துவபுரத்தில் அமைந்துள்ள குடியிருப்புகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை வழங்குகிறார். தொடர்ந்து, சமத்துவபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் பூங்கா, விளையாட்டு திடல், ரேஷன்கடை ஆகியவற்றை திறந்து வைப்பதோடு, அதே வளாகத்தில் நூலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டுகிறார்.
நலத்திட்ட உதவிகள்
இதனை தொடர்ந்து சமத்துவபுரத்தில் இருந்து புறப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடமான ஒழிந்தியாம்பட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 9.30 மணிக்கு வந்தடைகிறார். உடனே இசைப்பள்ளி மாணவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படு கிறது. அது முடிந்ததும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.
பின்னர் விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். இதையடுத்து அரசு திட்டங்கள் தொடர்பான காணொலி காட்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.2400.77 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை அவர், மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். தொடர்ந்து, 10,722 பயனாளிகளுக்கு ரூ.4269.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார். விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். விழா முடிவில் மாவட்ட கலெக்டர் மோகன் நன்றி கூறுகிறார். அதன் பிறகு இசைப்பள்ளி மாணவர்களின் நாட்டுப்பண் இசைக்கப்படுகிறது.
சிப்காட்
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒழுந்தியாம்பட்டில் இருந்து புறப்பட்டு காலை 10.30 மணியளவில் திண்டிவனம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் 11 மணியளவில் திண்டிவனம் பெலாக்குப்பத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்திற்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பில் லோட்டஸ் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசுகிறார். விழா முடிந்ததும் 11.30 மணியளவில் திண்டிவனத்தில் இருந்து அவர் சென்னைக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகையையொட்டி வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரேம்ஆனந்த் சின்கா, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 3 போலீஸ் சூப்பிரண்டுகள், 8 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், அதிரடிப்படையினர் ஆயுதப்படை போலீசார் என 2 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஏற்பாடுகள் தீவிரம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அவரை வரவேற்கும் விதமாக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிநெடுகிலும் தி.மு.க. கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. ஆங்காங்கே வரவேற்பு வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
Related Tags :
Next Story