கோலியனூர் பகுதியில் 3 தெருக்களில் சிமெண்டு சாலைகளை காணவில்லை
கோலியனூர் பகுதியில் 3 தெருக்களில் சிமெண்டு சாலைகளை காணவில்லை என பொதுமக்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள மாரியம்மன் கோவில் தோப்பு தெரு, கோலியனூர் தொடர்ந்தனூர் ஒட்டுத்தெரு, நடுத்தெரு ஆகிய 3 தெருக்களில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மூலம் ரூ.17 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலைகள் போடுவதற்காக 2021-2022-ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யபட்டு அந்த இடங்களில் சிமெண்டு சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட 3 தெருக்களிலும் சிமெண்டு சாலைகள் அமைக்கப்படாமலேயே சாலை போடப்பட்டதாக கல்வெட்டுகளை வைத்து திட்டமதிப்பீடு எவ்வளவு நாட்களில் முடிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர். இதனையறிந்ததும் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் சாலை போடாமலேயே போடப்பட்டதாக எவ்வாறு கல்வெட்டு அமைக்கலாம் என்று ஊராட்சி செயலாளரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனக்கு எதுவும் தெரியாது எனக்கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்கள் ஊரில் போடப்பட்ட 3 சிமெண்ட் சாலைகளையும் காணவில்லை என கோலியனூர் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டிகளில் சாலை பணியில் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் மீது தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர். சிமெண்டு சாலையை காணவில்லை என பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story