நெமிலியில் ரூ.3½ கோடியில் வாரச்சந்தை. அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்
நெமிலியில் ரூ.3½ கோடியில் வாரச்சந்தை கட்டுவதற்கு அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்.
நெமிலி
நெமிலியில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் குறிப்பிட்ட நாளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தற்போது உள்ள சந்தையின் மேற்பகுதி மணல் பரப்பாக உள்ளது. மழைக்காலத்தில் இங்கு வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகளும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 49 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக வாரச்சந்தை கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் விழாவுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
புதிய சந்தையில் மேற்கூறையுடன் கூடிய 160 பிளாட்பார கடைகளும், 2,716 சதுர மீட்டர் பரப்பளவில் பேவர் பிளாக் தரைத்தளமும், ஆர்.சி.சி. மேற்கூறையுடன் 6 வணிக வளாக கடைகளும், நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகளும் அமைய உள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜீஜாபாய், பேரூராட்சித் தலைவர் ரேணுகாதேவி, ஒன்றியக் குழுத்தலைவர் வடிவேலு, பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தரம்மாள், மங்கையர்கரசி, உதவி செயற்பொறியாளர் அம்சா, செயல் அலுவலர் சரவணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story