திருச்செங்கோடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை-கணக்கில் வராத ரூ.1½ லட்சம் பறிமுதல்
திருச்செங்கோடு ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
எலச்சிபாளையம்:
லஞ்சம் வாங்குவதாக புகார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு திருச்செங்கோடு, எலச்சிபாளையம், பள்ளிபாளையம், மல்லசமுத்திரம், கபிலர்மலை ஆகிய ஒன்றியங்களில் ஒப்பந்த அடிப்படையில் நடைபெறும் பணிகளுக்கான தொகை கணக்கீடு செய்யப்படும்.
ஒப்பந்த பணிகளுக்கான பணத்தை வழங்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிலர் லஞ்சம் கேட்பதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது.
பறிமுதல்
இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், இளநிலை வரைவு அலுவலர் பசுபதி, உதவியாளர் முத்துசாமி மற்றும் ஒப்பந்ததாரர்கள் 5 பேர் இருந்தனர்.
அவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் இருந்த கோப்புகளை ஆய்வு செய்தனர். சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணியை தாண்டியும் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story