தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள்பகுதி
உடைந்து தொங்கும் தெருவிளக்கு
வேலூர் அருகே சத்துவாச்சாரி குருதோப்பில் உள்ள 8-வது தெருவில், மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு உடைந்து தொங்குகிறது. மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜீவ்காந்தி, வேலூர்.
பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாட்டை தடுப்பார்களா?
செங்கம் பேரூராட்சி, புதுப்பாளையம் பேரூராட்சி உள்பட செங்கம் சுற்று வட்டாரக் கிராமங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சிறுவணிக கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் கவர்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாட்டை அதிகாரிகள் தடுப்பார்களா?
-பார்த்தசாரதி, செங்கம்.
பணிகள் விரைவாக நடக்குமா?
வேலூரை அடுத்த தமிழ்நாடு விட்டு வசதி வாரிய அலுவலகம் அருகே நீண்ட நாட்களாக கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. கான்கிரீட் அமைக்கக் கட்டப்பட்ட கம்பிகள் நீண்டு கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளன. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கால்வாய் பணிகளை விரைவாக முடிப்பார்களா?
-ராஜகோபால், வேலூர்.
6 மாதமாக அவதி படும் மக்கள்
வேலூர் சத்துவாச்சாரி குரு தோப்பு பகுதியில் பாரதிநகர் உள்ளது. இங்குள்ள 6-வது தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இன்னும் பணிகளை முடிக்காமல், பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல வசதியும் செய்யப் படாததால் பெரும் அவதிப்படுகிறார்கள். விரைவாக பணிகளை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குருமூர்த்தி, வேலூர்.
சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா வடுகசாத்து கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக சீனிவாசபுரம், புலவன்பாடி கிராமங்களுக்குச் செல்லும் தார் சாலையின் இரு பக்கமும் குப்பைகள், கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் சாலையின் அகலம் குறைந்து விட்டது. அந்த வழியாகநேர் எதிரே வாகனங்கள் வந்தால் ஒதுங்கி செல்லக்கூட இடம் இல்லை. நடந்து செல்வோர் கழிவுகளில் தான் கால் வைக்க நேரிடுகிறது. கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
-கண்ணதாசன், அக்ராபாளையம்.
மூடாமல் வைத்துள்ள பள்ளத்தால் ஆபத்து
வேலூர் சேண்பாக்கம் காந்தி சிலை அருகில் நான்கு முனை சாலை சந்திக்கும் இடத்தில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளத்தை பல நாட்கள் ஆகியும் இன்னும் மூடாமல் வைத்துள்ளனர். அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை பாதாள சாக்கடை திட்டப்பணியை விரைந்து முடித்து பள்ளத்தை மூட வேண்டும்.
-ஏ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.
பழுதான மின்கம்பம்
ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு லேபர்ஸ் கூல் தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் பழுதடைந்துள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பழுதான கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும்.
-த.நித்தியானந்தம், காரை.
கோவில் தெப்பக்குளம் ஆக்கிரமிப்பு
கலசபாக்கம் தாலுகா எலத்தூர் மோட்டூர் வில்வாரணி சிவசுப்பிரமணியசாமி கோவில் தெப்பக்குளம் புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெப்பக்குளத்தில் விடப்படுகிறது. பக்தர்கள் தெப்பக்குள நீரை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெப்பக்குள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
-சண்முகம், எலத்தூர்.
Related Tags :
Next Story