புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் பெண் வியாபாரி மயங்கி விழுந்தார்
புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பெண் பூ வியாபாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர் நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொள்ளவும், இல்லையெனில் அதனை அகற்றிய பின் சம்பந்தப்பட்டவர்களிடம் அதற்கான செலவு தொகை வசூலிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை நகராட்சியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை நகரின் முக்கிய பஜாரான கீழ ராஜவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று மாலை நடைபெற்றது. நகராட்சி ஊழியர், பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த பணிகள் நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குருநாதன் (டவுன்), முகமது ஜாபர் (கணேஷ்நகர்) மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெண் மயங்கி விழுந்தார்
கீழ ராஜவீதியில் கடைகள் முன்பு இருந்த சாலையோர கடைகள் ஆக்கிரமிப்புகள், பதாகைகள், கம்பங்கள், மழை நீர் வடிகாலை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை உள்ளிட்டவை அகற்றப்படடன. அப்போது பூ வியாபாரம் செய்து வந்த பெண் ஒருவர் தனது கடையின் மேஜையை அகற்றுவதை கண்டு அவர் அழுது புலம்பினார். மேலும் நகராட்சி ஊழியர்கள் மேஜையை எடுத்து வேனில் ஏற்றி செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்த முயற்சித்தார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர் மயங்கி கீழே விழுந்தார். அவருக்கு போலீசார் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பானது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியானது கீழ ராஜ வீதி முழுவதும் நடைபெறுவதோடு மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி உள்ளிட்ட கடை வீதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story