ஆலங்குளம்- மதயானைப்பட்டி சாலை சேதமடைந்ததால் போக்குவரத்து நிறுத்தம் பொதுமக்கள் அவதி
ஆலங்குளம்-மதயானைப்பட்டி சாலை ேசதமடைந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஆவூர்:
தார்சாலை
விராலிமலை ஒன்றியம், சூரியூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலங்குளத்தில் இருந்து வில்லாரோடை வழியாக மதயானைப்பட்டி ஊராட்சி வரை சுமார் 6 கிலோமீட்டர் அளவிற்கு கடந்த 4 வருடத்திற்கு முன்பு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை வழியாக திருச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து மதுரைரோடு, நாகமங்கலம் மார்க்கத்தில் மதயானைப்பட்டி, ஆலங்குளம் வழியாக இலுப்பூருக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ்சின் மூலம் நாகமங்கலம், மணிகண்டம், திருச்சிக்கு சென்று வருவதற்கு அப்பகுதியை சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் பணியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் ஆகியோர் அதிக அளவில் பயனடைந்து வந்தனர்.
வாகன ஓட்டிகள் சிரமம்
இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மதயானைப்பட்டி கோரையாற்றில் அரசு மணல் குவாரி அமைத்ததால் அங்கு மணல் குவாரிக்கு வந்து சென்ற லாரிகள் மற்றும் கடத்தல் மண் அள்ளி சென்ற லாரிகள் அதிக எடையுடன் மதயானைப்பட்டி-ஆலங்குளம் சாலை வழியாக சென்று வந்ததால் தார்சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறியது.
இதனால் அந்த சாலை வழியாக நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கோரிக்கை
இந்நிலையில் ஆலங்குளம்- மதயானைப்பட்டி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியதால் அந்த வழியாக திருச்சியில் இருந்து இலுப்பூருக்கு சென்று வந்த அரசு பஸ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பஸ்சை நம்பியிருந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார், அரசு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் ஆகியோர் விராலிமலை அல்லது பேராம்பூர் வழியாக திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் சேதமடைந்த ஆலங்குளம்- மதயானைப்பட்டி சாலையை சீரமைத்து அவ்வழியே சென்று வந்த அரசு பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாலை மறியல் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story