தேவகோட்டையில் பெயிண்டர் கொலை செய்யப்பட்டார்
தேவகோட்டையில் பெயிண்டர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தேவகோட்டை,
தேவகோட்டையில் பெயிண்டர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெயிண்டர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புது தெருவை சேர்ந்தவர் உமர்பாரூக் (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி ரிஸ்வானா பர்வீன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். உமர்பாரூக் பெயிண்டிங் மற்றும் கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் உமர்பாரூக் வீட்டில் இருந்து மாலை 3 மணிக்கு வெளியே புறப்பட்டு சென்றார். இரவு 10 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உமர்பாரூக்கை தேடினர்.
ரத்த காயம்
இந்த நிலையில் தேவகோட்டை ஆற்றுப்பாலம் அருகே ஒரு இடத்தில் அவர் ரத்த காயங்களுடன் கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த உமர்பாரூக்கை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை
இதுகுறித்து தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிவக்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். உமர்பாரூக்கை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story