மேட்டமலை கிராம பஞ்சாயத்து தலைவர் அதிகாரம் பறிப்பு
சாத்தூர் யூனியன் மேட்டமலை பஞ்சாயத்து தலைவரின் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை பறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர்,
சாத்தூர் யூனியன் மேட்டமலை பஞ்சாயத்து தலைவரின் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை பறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மேட்டமலை பஞ்சாயத்து
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளதாவது:-
சாத்தூர் யூனியன் மேட்டமலை கிராம பஞ்சாயத்து செயலர் கதிரேசன், வசந்தி என்பவரிடம் மேட்டமலை பஞ்சாயத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு கட்டிட வரைபட அனுமதி கோரிய விண்ணப்பித்ததற்கு கடந்த 8.2.2022 அன்று ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணைக்கு உரிய ஆவணங்களை பஞ்சாயத்து தலைவர் வழங்க மறுத்ததால் செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித் துறை), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), சாத்தூர் ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் ஆகியோர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
பூட்டிச்சென்றார்
விசாரணை குழு, விசாரணை தொடர்பாக மேட்டமலை பஞ்சாயத்து அலுவலகம் சென்ற போது பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து அலுவலகத்தை விசாரணையை தடுக்கும் நோக்கத்தில் பூட்டிச் சென்றதால் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் அலுவலகம் திறக்கப்பட்டது. ஊராட்சி தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பஞ்சாயத்து வரவு, செலவு கணக்கு ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து பராமரிக்க வேண்டிய ஆவணங்களை பஞ்சாயத்து அலுவலகத்தில் இல்லாமல் செய்து, பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய விடாமல் தடுத்தது, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த தீர்மானங்களை தராமல் திட்டத்தினை செயல்படுத்த விடாமல் தடுத்தது, மேலும் ஊராட்சி மன்ற தலைவரின் அடிப்படை கடமைகளை செய்வதிலிருந்து தவறியுள்ளார்.
அதிகாரம் பறிப்பு
அதன்அடிப்படையில் ஊராட்சி மன்ற நிர்வாக நலன் கருதியும், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளவும், மத்திய, மாநில அரசு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு வசதியாகவும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 203-ன்படி கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரத்தை பயன்படுத்தி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேட்டமலை கிராம பஞ்சாயத்து காசோலைகள் மற்றும் தனியார் துறைகளில் முதன்மை கையொப்பமிடும் அதிகாரத்தை மேட்டமலை பஞ்சாயத்து தலைவரிடம் இருந்து பறித்து சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம பஞ்சாயத்து) வழங்கி கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story