தஞ்சையில், காய்கறிகள் விலை உயர்வு
தஞ்சையில் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. ஒரு நேந்திரம் வாழைத்தார் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர்;
தஞ்சையில் காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. ஒரு நேந்திரம் வாழைத்தார் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்காலிக மார்க்கெட்
தஞ்சை குழந்தையேசு கோவில் அருகே தற்காலிக காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் விற்பனைக்காக எடுத்துச்செல்வது வழக்கம். தஞ்சை மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகின்றன.
வாழைத்தார் விலை உயர்வு
இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளில் இருந்து வரும் வாழை பழங்கள் கடந்த வாரம் தஞ்சையில் ஒரு கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்ட பச்சை வாழை ரூ.18-க்கும், கிலோ ரூ.13-க்கு விற்கப்பட்ட பூவன் வாழை ரூ.15-க்கும், கிலோ ரூ.13-க்கு விற்பனை செய்யப்பட்ட ரஸ்தாளி வாழை ரூ.19-க்கும், கிலோ ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்ட மொந்தம் வாழை ரூ.18-க்கும், கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்த நேந்திரம் வாழை ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட செவ்வாழை மற்றும் கற்பூரவள்ளி வாழைத்தார் விலையில் மாற்றம் இல்லை.
இதே போல் வாழைத்தார்களும் விலை அதிகரித்து காணப்படுகிறது. ரூ.450-க்கு விற்பனை செய்த பச்சை வாழைத்தார் ரூ. 600-க்கும், ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட பூவன் வாழைத்தார் ரூ.400-க்கும், ரூ.250-க்கு விற்பனை செய்த ரஸ்தாளி வாழைத்தார் ரூ.400-க்கும், ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்ட மொந்தன் வாழைத்தார் ரூ.400-க்கும், ரூ.300-க்கு விற்பனை செய்த நேந்திரம் வாழைத்தார் ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.500 மற்றும் ரூ.600-க்கு விற்பனை செய்த செவ்வாழைத்தார், கற்பூரவள்ளி வாழைத்தார் விலைகளில் மாற்றம் இல்லை.
பெட்ரோல், டீசல் விலை
இதுகுறித்து வாழைத்தார் வியாபாரிகள் கூறுகையில், தஞ்சைக்கு வெளிமாட்டங்களில் இருந்து லாரிகள், சரக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்கு வாழைத்தார்கள் கொண்டுவரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து கொண்டே வருகின்றன. அதேபோல் சுங்கச்சாவடி கட்டணமும் அதிகரித்துள்ளது.
இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறி விலை மற்றும் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் விலை அதிகரித்தால் வாழைத்தார் மற்றும் காய்கறி விலை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story