கர்நாடகத்தில் மின்கட்டணம் திடீர் உயர்வு


கர்நாடகத்தில் மின்கட்டணம் திடீர் உயர்வு
x
தினத்தந்தி 5 April 2022 2:39 AM IST (Updated: 5 April 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை தொடர்ந்து ஒரு யூனிட்டுக்கு 35 பைசா மின்கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெங்களூரு:

மின்கட்டணம் திடீர் உயர்வு

  கர்நாடகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை என்ற ரீதியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதாவது மின்வினியோக கழகங்களின் கோரிக்கையை ஏற்று கர்நாடன மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது.

  மாநிலத்தில் கர்நாடக மின்பகிர்மான கழகம், மங்களூரு மின்வினியோக கழகம், பெங்களூரு மின்வினியோக கழகம், உப்பள்ளி மின்வினியோக கழகம், கலபுரகி மின்பகிர்மான கழகம், சாமுண்டீஸ்வரி மின்வினியோக கழகம் ஆகிய மின்பகிர்மான கழகங்கள் மூலம் மாநிலம் முழுவதும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

  இந்த மின்பகிர்மான கழகங்கள், நடப்பாண்டு மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை வலியுறுத்தி வந்தன. அதன்படி கர்நாடகத்தில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 35 பைசா கட்டணம் அதிகரித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  இது கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் மஞ்சுநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

35 பைசா உயர்வு

  கர்நாடகத்தில் உள்ள மின்சார வினியோக நிறுவனங்கள், மின் கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு 185 பைசா உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தன. ரூ.2,159 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்தன. சராசரியாக மின் கட்டணம் யூனிட்டுக்கு 35 பைசா உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  அதாவது மின் கட்டணம் 4.33 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மேலும் உறுதி செய்யப்பட்ட கட்டணத்தை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்த்தப்படுகிறது.

முன்தேதியிட்டு அமல்

  இந்த கட்டண உயர்வு முன்தேதியிட்டு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. கொரோனா பரவல் காரணமாக மின் வினியோக நிறுவனங்களின் மின் விற்பனை 7,228 மில்லியன் யூனிட்டாக குறைந்துள்ளது.

  இதனால் வினியோக நிறுவனங்களுக்கு வருவாய் ரூ.6,182 கோடி குறைந்துள்ளது. அதே போல் கடந்த 2021-ம் ஆண்டு மின்சாரம் கொள்முதல் செய்யும் செலவும் யூனிட்டுக்கு 31 பைசா அதிகரித்துள்ளது.

இலவச மின்சாரம்

  மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போதைய கட்டணமே நீடிக்கும். சிறு-குறு நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு 50 பைசா தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி சலுகை அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும்.

  கர்நாடகத்தில் 33.15 லட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு மாநில அரசு வழங்கும் மானியம் ரூ.13 ஆயிரத்து 638 கோடியாக அதிகரித்துள்ளது. உபரி மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.6 என்ற அளவில் விற்பனை செய்ய மின் வினியோகம் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  இவ்வாறு மஞ்சுநாத் கூறினார்.

மக்கள் கடும் அதிர்ச்சி

  பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. அதுபோல் அவ்வப்போது வர்த்தக சிலிண்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் உணவகங்களில் உணவுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காபி, தேநீர் விலையும் அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

  இந்த நிலையில் கர்நாடகத்தில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

  ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் வருவாயை இழந்து தவிக்கிறார்கள். பலர் வேலைகளை இழந்து கஷ்டப்படுகிறார்கள். பொதுமக்களுக்கு அன்றாடம் வாழ்க்கையை நடத்துவதே பெரும்பாடாக மாறியுள்ளது. எனவே மின்கட்டண உயர்வை கர்நாடக அரசு தள்ளிப்போட வேண்டும் என்று தொழிற்சாலை உரிமையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story