பெண்ணின் திருமணத்திற்காக திருவிழாவை முன்கூட்டியே நடத்திய கிராம மக்கள்
பெண்ணின் திருமணத்திற்காக தீமிதி திருவிழாவை முன்கூட்டியே கிராம மக்கள் நடத்தினர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தீமிதி திருவிழா நடைபெறவில்லை.
தற்போது கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக கோவிலில் இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் கோவிலில் மகாபாரத கதைகளும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. திருவிழாவின் 18-ம் நாளான வருகிற வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடத்த கிராம மக்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற புதன்கிழமை பெண் அழைப்பு நடைபெற இருந்தது. ஆனால் திருவிழாவிற்கு காப்பு கட்டி, காப்பு அறுக்கும் வரை கிராமத்தில் இருந்து யாரும் வெளியூர் செல்லக்கூடாது என்ற விதிமுறை அந்த ஊரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் திருமணத்திற்காக மணப்பெண்ணை எப்படி அனுப்பி வைக்க முடியும் என்ற பிரச்சினை எழுந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் திருமணம் தடைபடக்கூடாது என்பதற்காக கிராம மக்கள் 18-ம் நாளன்று நடைபெற இருந்த தீமிதி திருவிழாவை 14-ம் நாளான நேற்று நடத்தி முடித்தனர். தங்களது கிராமத்தில் பிறந்த பெண் வெளியூர் சென்று நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக கிராம மக்கள் தங்களது திருவிழாவை மாற்றி அமைத்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story