விக்கிரமசிங்கபுரத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
விக்கிரமசிங்கபுரத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டd;தால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பு பகுதியில் சுமார் 2 ஏக்கர் நிலத்தை ஒரு தரப்பினர் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிலத்தின் ஒரு பகுதியில் மற்றொரு தரப்பினர் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். இந்த நிலத்துக்கு உரிமை கொண்டாடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
அந்த நிலத்தில் ஒரு தரப்பினர் கம்பிவேலி அமைக்க முயன்றபோது மற்றொரு தரப்பினர் அவற்றை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அனவன்குடியிருப்பில் பிரச்சினைக்குரிய நிலத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்து தர வேண்டும் என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று அந்த நிலத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில், தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை அரசிடம் திரும்ப ஒப்படைப்பதாக கூறினர்.
இதையடுத்து தாசில்தார் ஆனந்த் பிரகாஷ், துணை தாசில்தார் ராஜதுரை மற்றும் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிலத்தை உடனே அளவீடு செய்வதாகவும், அம்பை தாலுகா அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story