நீலகிரியில் கட்டுமான பொருட்கள் விலை திடீர் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக நீலகிரியில் கட்டுமான பொருட்கள் விலை திடீரென உயர்ந்து உள்ளது.
ஊட்டி
பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக நீலகிரியில் கட்டுமான பொருட்கள் விலை திடீரென உயர்ந்து உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. சமவெளி பகுதிகளை காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் இன்று ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 பைசா அதிகரித்து ரூ.112.29-க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் 76 பைசா அதிகரித்து ரூ.102.04-க்கு விற்பனையானது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள் கட்டணம் அதிகரித்து உள்ளது. இது தவிர கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து இருக்கிறது.
எம்.சாண்ட் யூனிட் ரூ.6,500
நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மலை பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் செங்கல், மணல், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் பிற இடங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பை விட தற்போது கட்டுமான பொருட்கள் விலை திடீரென உயர்ந்து உள்ளது. இதுகுறித்து ஊட்டியை சேர்ந்த கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் கூறியதாவது:-
ஊட்டியில் ஒரு செங்கல் ரூ.12-ல் இருந்து ரூ.13 ஆக விலை உயர்ந்து உள்ளது. எம்.சாண்ட் மணல் ஒரு யூனிட் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.6,500 ஆகவும், ஆற்று மணல் ஒரு யூனிட் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாகவும், 50 கிலோ சிமெண்டு மூட்டை ரூ.430-ல் இருந்து ரூ.460 ஆகவும், ஜல்லி ஒரு யூனிட் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.5,500 ஆகவும் விலை அதிகரித்து இருக்கிறது.
தொழிலாளர்கள் பாதிப்பு
இதற்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாடகை கட்டணம் உயர்ந்ததே ஆகும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு லாரியில் கட்டுமான பொருட்கள் கொண்டு வர ரூ.7,500 வாடகை இருந்தது. எரிபொருள் விலை உயர்ந்ததால் ரூ.1,500 ரூபாய் அதிகரித்து ரூ.9 ஆயிரம் வாடகை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் வெளியிடங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் கட்டுமான பொருட்கள் அளவு குறைந்து இருக்கிறது. இதனால் அதை நம்பி பணிபுரிந்து வரும் டிரைவர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story