தலைமறைவான நகை மதிப்பீட்டாளர் ஊட்டி கோர்ட்டில் சரண்


தலைமறைவான நகை மதிப்பீட்டாளர் ஊட்டி கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 5 April 2022 7:49 PM IST (Updated: 5 April 2022 7:49 PM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவனத்தில் ரூ.98¼ லட்சம் நகை மோசடி செய்துவிட்டு தலைமறைவான நகை மதிப்பீட்டாளர் ஊட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார். பெண் மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஊட்டி

நிதி நிறுவனத்தில் ரூ.98¼ லட்சம் நகை மோசடி செய்துவிட்டு தலைமறைவான நகை மதிப்பீட்டாளர் ஊட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார். பெண் மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நிதி நிறுவனம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜாரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு சிலரது கணக்கில் நகை அடகு வைக்காமலேயே அடகு வைத்ததற்கு வட்டி செலுத்த நோட்டீஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அந்த நிதி நிறுவனத்துக்கு சென்று முறையிட்டனர். மேலும் உயர் அதிகாரிகள் தணிக்கை செய்ததில், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் போலி ஆவணங்களை உருவாக்கி பணத்தை எடுத்ததும், அடகு வைத்த நகைகளை எடுத்து விட்டு போலி நகைகளை வைத்து மோசடி செய்ததும் தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நிதி நிறுவன மேலாளர் சாந்திபிரியா, நகை மதிப்பீட்டாளர் ராஜூ, கணக்காளர் நந்தினி (வயது 27), கணினி ஆபரேட்டர் விஜயகுமார் (29) ஆகிய 4 பேர் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.98¼ லட்சம் நகை

அதாவது கடந்த 9.3.2021-ந் தேதி முதல் 1.9.2021-ந் தேதி வரை நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் 81 பேர் அடகு வைத்த நகைகளை எடுத்து விட்டு, போலி நகைகளை வைத்து உள்ளனர். மேலும் 43 பேரின் நகைகளை வேறு வாடிக்கையாளர்களின் பெயர்களில், அவர்களுக்கே தெரியாமல் போலியான ஆவணங்களை உருவாக்கி அடகு வைத்து, அவர்களது கையெழுத்தை போட்டு பணம் எடுத்து இருக்கின்றனர். 

மொத்தம் ரூ.98 லட்சத்து 30 ஆயிரத்து 103 நகைகளை ஏமாற்றி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நந்தினி, விஜயகுமார் ஆகிய 2 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 

கோர்ட்டில் சரண்

மேலும் மோசடியில் முக்கிய புள்ளியாக செயல்பட்டு தலைமறைவான சாந்திபிரியா, ராஜூ ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர். அவர்களது செல்போன் எண்களை வைத்து எந்த இடத்தில் உள்ளனர்? என விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த நகை மதிப்பீட்டாளர் ராஜூ, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவரை குன்னூர் கிளை சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள சாந்திபிரியாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story