தேசிய தடகள போட்டிக்கு தேனி போலீஸ் ஏட்டு தேர்வு


தேசிய தடகள போட்டிக்கு தேனி போலீஸ் ஏட்டு தேர்வு
x

தேசிய தடகள போட்டியில் பங்கேற்க தேர்வான தேனி போலீஸ் ஏட்டுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.

தேனி: 

மாஸ்டர்ஸ் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வருகிற மே மாதம் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. 

இதில் பங்கேற்கும் தமிழக வீரர்களை தேர்வு செய்ய மாநில அளவிலான தேர்வு போட்டிகள் மதுரையில் கடந்த 3-ந்தேதி நடந்தது. இதில், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் தேனி மாவட்டம், கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு மாரியப்பன் பங்கேற்றார். தட்டு எறிதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு வீசி எறிதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டார். 

இந்த 3 போட்டிகளிலும் அவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து போலீஸ் ஏட்டு மாரியப்பனை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டு தெரிவித்தார். தேசிய அளவிலும் பதக்கம் வெல்ல போலீஸ் சூப்பிரண்டு ஊக்கம் அளித்து பாராட்டினார்.

Next Story