மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தும் விஷயத்தில் அனைவரின் கருத்தும் கேட்கப்படும்- பசவராஜ் பொம்மை பேட்டி
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தும் விஷயத்தில் அனைவரின் கருத்துக்களையும் பெற்று அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தும் விஷயத்தில் அனைவரின் கருத்துக்களையும் பெற்று அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அனைவரின் நம்பிக்கை
கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடங்குவதாக குமாரசாமி கூறியுள்ளார். போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அடிப்படை ஆதாரமற்ற கருத்துகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. பா.ஜனதா தேசிய கட்சி. கர்நாடக மக்கள் எங்கள் கட்சிக்கு ஆசி வழங்கியுள்ளனர். மக்களுக்கு நல்லாட்சி வழங்குகிறோம்.
குமாரசாமி ஹிஜாப் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அவற்றுக்கு கடந்த 2001-2002-ம் ஆண்டுகளிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் அரசு புதிதாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது என்று சிலர் வலியுறுத்துகிறார்கள். இந்த விஷயத்தில் அரசு அனைவரின் கருத்துக்களையும் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கும்.
ஆலோசனை நடக்கவில்லை
ஒலிப்பெருக்கிகள் பயன்பாடு குறித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதை ஏன் சரியாக செயல்படுத்தவில்லை என்றும் கேட்டு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு ஒலியை பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலியை அளவிடும் டெசிபில் மீட்டரை பொருத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு கூறியுள்ளது.
இந்த உத்தரவை யாரையும் கட்டாயப்படுத்தாமல் அனைவரின் நம்பிக்கையையும் பெற்று அமல்படுத்த வேண்டியது அரசின் வேலை. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து இதுவரை எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. எங்கள் கட்சி தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க நேரம் கிடைத்தால் அதுபற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
அனைத்து தரப்பினரும் சமம்
உலகம் முழுவதும் தகவல்-உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் பெங்களூருவில் முதலீடு செய்கின்றன. நிலைமை இவ்வாறு இருக்க தெலுங்கானா தகவல்-உயிரி தொழில்நுட்பத்துறை மந்திரி கே.டி.ராமாராவ், இங்குள்ள நிறுவனங்களை ஐதராபாத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பது அபத்தமானது. பெங்களூருவில் அதிக எண்ணிக்கையில் புதிய நிறுவனங்கள் மற்றும் யுனிகார்ன்ஸ் நிறுவனங்கள் உள்ளன.
அரசின் பார்வையில் அனைத்து தரப்பு மக்களும் சமம். எந்த அமைப்போ அல்லது சமூகமோ சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். எந்த பாகுபாடும் பார்க்காமல் அரசு பணியாற்றும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story