அரசு நிதியில் ரூ.27 லட்சம் கையாடல்
விழுப்புரத்தில் அரசு நிதியில் ரூ.27¾ லட்சத்தை கையாடல் செய்த விளையாட்டு அலுவலர், ஊர்க்காவல் படை மண்டல தளபதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளாமல் பணி செய்ததாக போலியாக கணக்கு காண்பித்து பணம் மோசடி செய்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றன.
இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை அப்போதைய விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணியாற்றிய ஞானசேகரன் (வயது 44), தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் உரிமையாளரான விழுப்புரம் வ.உ.சி. தெருவை சேர்ந்த ரகுநாதன் (42) மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலராக பணியாற்றிய விழுப்புரம் கல்லூரி சாலை நாவலர் நெடுந்தெருவை சேர்ந்த தணிகாசலம் மகன் மணிகண்டன் (23) ஆகியோர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிதியை போலி ரசீது மூலம் கையாடல் செய்தது தெரியவந்தது.
ரூ.27¾ லட்சம் கையாடல்
இதுதொடர்பாக மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானம், உள் அரங்குகள் பராமரிப்பு, நீச்சல் குளம் பராமரிப்பு, விளையாட்டு போட்டிகள் நடத்துதல், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு உணவு, விளையாட்டு பொருட்கள், சீருடைகள் வழங்குதல், தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் ஆட்களை வைத்து பணி செய்தல் இவ்வாறு பல்வேறு பணிகளை செய்யாமலேயே பணிகள் செய்ததாக போலியான ரசீதை அரசுக்கு அனுப்பி அரசு நிதியை கையாடல் செய்துள்ளனர்.
இவ்வாறாக கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 792 மற்றும் 2018-19-ம் ஆண்டில் ரூ.9 லட்சத்து 76 ஆயிரத்து 230 என மொத்தம் ரூ.18 லட்சத்து 90 ஆயிரத்து 22-க்கான காசோலையை ஞானசேகரன், சட்டவிரோதமாக ரகுநாதனுக்கு வழங்கியுள்ளார். அந்த காசோலையை ரகுநாதன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் செலுத்தி பணத்தை பெற்றுள்ளார். இதில் ரூ.1 லட்சத்திற்கு 20 சதவீத தொகையை ரகுநாதனுக்கும், இதற்கு உதவி புரிந்த மணிகண்டனுக்கு 3 சதவீத தொகையையும் ஞானசேகரன் கமிஷனாக வழங்கியுள்ளார். இவ்வாறாக 3 பேரும் கூட்டுசேர்ந்து அரசு நிதியை கையாடல் செய்துள்ளனர். இதுதவிர பல்வேறு பணிகள் மூலமாக ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 700-ஐ ஞானசேகரன் மட்டும் தனியாக கையாடல் செய்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
3 பேர் மீது வழக்கு
இதையடுத்து ஞானசேகரன், ரகுநாதன், மணிகண்டன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஞானசேகரன் தற்போது சென்னை எழும்பூரில் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியம் அலுவலராகவும், ரகுநாதன் விழுப்புரத்தில் ஊர்க்காவல் படை மண்டல தளபதியாகவும் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story