உர தட்டுப்பாட்டை போக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்
உர தட்டுப்பாட்டை போக்க கோரி விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும், தனியார் உர கடைகளில் உரம் இருப்பு இருந்தும் ரூ.270 யூரியா மூட்டை பெற வேண்டும் என்றால் ரூ.750 மதிப்புள்ள பயிர் ஊட்டச்சத்து பக்கெட்டை விவசாயிகள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் டவுன் போலீஸ் நிலையம் அருகே விவசாயிகள் சங்கத்தினர் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோமையா தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். மறியலின் போது கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப் படுத்தினர். அதன்பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் மேல ராஜ வீதி அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து வரிசையாக நின்றன. அதன்பின் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
Related Tags :
Next Story